ஜூலை 17, 2016

ஆல்பர்ட் காம்யூவின் அந்நியனும் அபத்தவாதமும்

அபத்தவாதம் என்ற தத்துவக் கருத்தியலை முன்னெடுத்தவர்களில் ஆல்பர்ட் காம்யூ முக்கியமானவர். வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக இருக்கும் நிலையில் அதற்கு அர்த்தம் தேடுவதென்பது தேவையற்றது என்பதே அபத்தவாதமாகும்(absurdism)

கீர்கேகார்ட் மற்றும் காம்யூவின் கூற்றுக்கள்படி அபத்தவாதத்தை மூன்று வழிகளில் கடக்கலாம்
1. வாழ்க்கை அர்த்தமற்றது என்று உணர்ந்துகொள்ளும் தருவாயில் தற்கொலை செய்துகொள்வது. ஆனால் காம்யூ இது நம்பகத்தன்மையற்றது எனவும் கூறுகிறார்.
2. நமக்கு மேலாக ஒரு சக்தி இருக்கிறது என்று கருதி அதனைத் தேடி ,வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வதாக நினைத்துக் கொள்வது.
3. வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை உணர்ந்து அதன் அர்த்தமற்ற தன்மையோடே அந்தந்த கணத்தில் வாழ்வது.
(reference: https://en.m.wikipedia.org/wiki/Absurdism)

ஆல்பர்ட் காம்யூவின் அந்நியன் (The stranger) என்னும் குறுநாவல் அபத்தவாதத்தை முன்னிறுத்தும் முக்கியப் படைப்புகளில் ஒன்று. கதையின் முக்கிய கதாபாத்திரமான மெர்சால்ட்(meursault), பிரான்சின் ஆட்சியின் கீழ் இருந்த அல்ஜீரியாவில் வேலை செய்து கொண்டிருக்கும் பிரெஞ்சு இளைஞன். மேரி என்ற பெண்ணோடு நெருக்கமாகப் பழகி வருகிறான். ஒருநாள் தனக்கு அருகிலேயே தங்கியிருக்கும் ரெய்மெண்டின் அறைக்கு ஒயின் அருந்தப் போகிறபொழுது ரெயி்மெண்டின் கையில் ஏற்பட்ட காயம் பற்றி வினவுகிறான். தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும் அவளுக்கு நிறைய பண உதவி செய்ததாகவும் ஆனால் அவள் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் எனவே ரத்தம் வருகிற அளவிற்கு அவளை அடித்துவிட்டதால் அவளது அரபி அண்ணன் தன்னை சாலையில் வைத்து அடித்ததாகவும் ரெய்மண்ட் கூறுகிறான். அவளைப் பழிவாங்க வேண்டுமென்றும் அதற்கு ஏதாவது யோசனை சொல்லுமாறும் மெர்சால்டிடம் கேட்கிறான். மெர்சால்ட் அமைதியாக இருக்கவே, அவளைத் தவறாக நினைத்து விட்டேன் என்று பொய்யாக ஒரு கடிதம் எழுதி அவளைத் தன் அறைக்கு வர வைத்து துன்புறுத்தித் துரத்தலாமா என ரெய்மண்ட் கேட்க அதற்கு மெர்சால்ட் ஒப்புக்கொள்கிறான். அந்தக் கடிதத்தையும் ரெய்மண்ட் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி மெர்சால்ட்டே எழுதுகிறான். அந்தக் கடிதத்தைப் பார்த்து அறைக்கு வரும் காதலியை ரெய்மெண்ட் தாக்க அவளும் திருப்பித் தாக்க பெரும் பிரச்சனையாகிவிடுகிறது. போலிஸிடம் மாட்டிக்கொள்கிற ரெய்மெண்டுக்கு ஆதரவாக சாட்சி சொல்வதன் மூலம் ரெய்மண்டும் , மெர்சால்டும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்.

அதற்கு அடுத்து வருகிற விடுமுறை தினமொன்றில் ரெய்மண்டின் நண்பன் மாசனின் கடற்கரை வீட்டிற்கு ரெய்மண்ட், மீர்சால்ட், மேரி செல்கிறார்கள். ரெய்மண்டின் காதலியின் அண்ணனும் அவனது கூட்டாளியும் ரெய்மண்டைப் பழிவாங்க அவர்களைப் பின்தொடர்ந்து வருகிறார்கள். கடற்கரையில் நடக்கும் கைக்கலப்பில் ரெய்மண்டின் வாய் மற்றும் கை காயம் படுகிறது. இதனால் பெரும் கோபமடையும் ரெய்மண்ட் , கடற்கரை வீட்டின் அறைக்கு சென்று ரிவால்வரை எடுத்துக்கொண்டு வருகிறான். அரபிகள் தன்னைத் தாக்கினால் சுடுமாறு மெர்சால்டிடம் துப்பாக்கியைக் கொடுக்கிறான். அதற்குள் அரபிகள் தப்பி ஓடி விடுவதால் ரெய்மண்ட் அறைக்கு சென்று விடுகிறான். ஆனால் ஏதோ ஒரு உந்துதலில் மீண்டும் கடற்கரைக்கு செல்லும் மெர்சால்ட் எதிர்பாராதவிதமாக அரபி ஒருவனை சுட்டுக்கொன்று விடுகிறான். அதன்பின் என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை.

அரபியை மெர்சால்ட் சுட்டுக் கொல்வதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது. மெர்சால்ட் நெற்றி வியர்வை கண்ணில் வழிந்து அவன் கண் தெரியாமல் அரபியை சுடுவதாக காம்யூ எழுதுகிறார். சீரான மனநிலையை மெர்சால்ட் இழந்துவிட்ட தருணமாக இதைக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் அர்த்தமற்ற வாழ்வை அறிந்திருந்த மெர்சால்ட் தன் வாழ்வின் முடிவை அறிந்தே அதை மனதார விரும்பியபடியே சுட்டான் என்பதுதான் காம்யூஸின் வரிகளுக்கு சாலப் பொருந்துவதாகும்.

மெர்சால்ட் சுட்டது நமக்கு அபத்தமாகத் தெரியும் சூழலில் வாழ்க்கையே அபத்தம்தான் என்பதைத்தான் நாவல் முழுக்க காம்யூ சொல்கிறார்.  முதியோர் இல்லத்தில் மறைந்துவிட்ட தன் தாயைப் பார்க்கச் செல்லும் மெர்சால்ட் தாயின் முகத்தையும் பார்க்க மாட்டான் அழவும் மாட்டான் . செயற்கையாக உணர்வுகளை வருவிக்காமல் சிகரெட் பிடித்து ,காபி குடித்து, படுத்துத் தூங்கி என தன் தாயின் மூடிவைக்கப்பட்ட பிணத்தின் அருகிலேயே இவற்றையெல்லாம் செய்து தாயின் அடக்கத்தையும் முடித்துவிட்டுவருவான். மெர்சால்டின் இந்த எதைப் பற்றியும் கவலைகொள்ளாத உணர்வற்ற நிலை என்பது நாவல் முழுக்க அபத்தவாதத்தை உணர்த்தும் பொருட்டு எல்லா இடங்களிலும் தொடர்ந்து வரும். காதலி மேரி நாம் திருமணம் செய்துகொள்ளலாமா எனக் கேட்பாள். உனக்கு வேண்டுமென்றால் செய்து கொள்ளலாம் என்பான். ஏன் இப்படி சொல்கிறாய் , நீ என்னை விரும்பவில்லையா என்று கேட்பாள். நான் உன்னை திருமணம் செய்து கொள்வதும், செய்து கொள்ளதாதும் ஒன்றுதான்.எனக்கு மகிழ்ச்சி, துன்பம் என்றெல்லாம் எதுவும் இல்லை , எதுவானாலும் மகிழ்ச்சிதான், அதனால்தான் உனக்கு வேண்டுமென்றால் செய்துகொள்ளலாம் என்று சொன்னேன் என விளக்குவான்.

மெர்சால்டிடம் விசாரணை நடத்தும் அதிகாரி அபத்தவாதத்தை உணர்ந்து அதனை மதத்தின் மூலம் கடக்க முயல்கிறவர் என்று புரிந்துகொள்ள முடிகிறது. எனவே விசாரணையின் ஊடாக மத நம்பிக்கையை, கடவுள் நம்பிக்கையை மெர்சால்டிற்கு ஏற்படுத்த முயன்று தோல்வியும் காண்கிறார். சூழல்சார் காரணிகளால் தான் கொலை செய்ய நேர்ந்ததாகவும் அதில் தனக்கு வருத்தமில்லையென்றும் இதிலிருந்து விடுபட ஒருபோதும் கடவுளை உதவிக்கு அழைக்கமாட்டேன் என மெர்சால்ட் சொல்வது அபத்தவாதத்தின் கடவுள் மறுப்பை முன்னிறுத்துகிறது.

சிறையில் பொழுதைப்போக்க ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கை மெர்சால்ட் செய்கிறான். கற்பனை செய்வதுதான் அந்த வழி. தன் அறையில் இருக்கும் மரச்சாதனங்கள், வீட்டிலுள்ள பொருட்களை அங்குல அங்குலமாக கற்பனை செய்கிறான். தனி மனிதனாக யாருமின்றி வாழ முடியமென்றும் நேரத்தைக் கொல்ல இதுபோன்ற கற்பனைகள் போதுமென்றும் மெர்சால்டின் இச்செயல்பாடுகள்வழி தனிமனித சுதந்திரம் தேவை என்கிற அபத்தவாதக் கருத்தியலை காம்யூ முன்வைக்கிறார்.

நீதிமன்ற விசாரணையில் ,சாட்சி சொல்லும் ரெய்மண்ட் மற்றும் நாயகன் தினமும் உணவருந்தும் உணவக உடைமையாளர் செலிஸ்டி இடையேயான பண்புநிலை வேறுபாடு மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. ரெய்மண்ட் மிகவும் மொண்ணையாக சாட்சி சொல்ல , மெர்சால்ட் எந்த நம்பிக்கையும் வைக்காத செலிஸ்டி , மெர்சால்ட் செய்தது கொலை அல்ல கவனக்குறைவு என நீதிபதியிடம் மன்றாடி கண்ணீர் விடும்போது, நான் வாழ்க்கையில் முத்தமிட விரும்பும் ஒரு ஆண் என செலிஸ்டியை மெர்சால்ட் சொல்வது ரசிக்கத்தக்க இடம்.

கடைசியாக சாவின் தருவாயிலாவது கடவுளை நம்புவாயா என்று விசாரணை அதிகாரி கேட்கும்போது சாவு என்றைக்கு வந்தாலும் சாவுதான் அது நாளைக்கு வந்தாலும் நாற்பது வருடம் கழிந்து வந்தாலும் இதே மனநிலைதான் அதற்கு கடவுளின் துணை தேவையில்லை என மெர்சால்ட் சொல்வது அபத்தவாதத்தின் கருத்தியலை மீண்டுமொருமுறை அழுத்தமாக கடைசிவரை முன்னிறுத்துகிறது.

மீண்டுமொருமுறை பிறந்து வருதலை நீ விரும்புகிறாய் அல்லவா என்று விசாரணை அதிகாரி கேட்கும்போது அந்த சிந்தனை எல்லா மனிதனுக்கும் ஒரு கணம் தோன்றக்கூடும் ஆனால் சாவிற்கு பின்னராய் என்னவென்று தானறியா நிலையில் மீண்டும் வரும் சாத்தியங்களுக்கான எண்ணங்களைத் தான் கடந்துவிட்டதாகவும் மெர்சால்ட் சொல்கிறான். அப்போது மெர்சால்டிற்கு தன் தாயின் நினைவு வருகிறது. அவளின் மரணத்தருவாயில் அவளுக்கு முதியோர் இல்லத்தோழர் மீது ஏற்பட்ட காதல் நினைவிற்கு வருகிறது. மீண்டும் முதலிலிருந்து துவங்கி வாழவேண்டும் என நினைத்ததன் விளைவே அது என மெர்சால்ட் நினைக்கிறான். மெர்சால்டுக்கு அந்த அந்தக் கணங்களே இன்பமாய் இருக்கிறது. அவன் நினைவுகளில் வாழ்வதில்லை. அந்த நொடியில் மட்டுமே வாழ்கிறான். அபத்தமான வாழ்வைக் கடப்பது அப்படித்தான் என காம்யூ சொல்கிறார். இதன் சாத்தியங்கள் சிந்திக்கப்பட வேண்டியது. எவ்வளவு அபத்தமானாலும் வாழ்வதைத் தவிர நாம் என்ன செய்துவிட முடியும்? அதையேதான் காம்யூவும் சொல்கிறார்.