ஜூலை 21, 2017

கிம் கி டுக்கின் இரண்டு திரைப்படங்கள்

உலக சினிமா ரசிகர்கள் கிம் கி டுக், கிம் கி டுக் என்று அடிக்கடி குறிப்பிட்டுக்கொண்டிருந்ததால் அவர் படங்களைப் பார்த்துவிடவேண்டும் என்கிற ஆசை எனக்கு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அந்த ஆசையை பூர்த்திசெய்து கொள்ளும் பொருட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு கிம்மின் spring summer fall  winter and spring மற்றும் 3 Iron ஆகிய திரைப்படங்களைப் பார்த்தேன்.

ஊரிலிருந்து விலகி ஆற்றின் நடுவில் இருக்கிற மிதக்கும் புத்த கோவிலொன்றில் வாழும் குரு மற்றும் சிஷ்யனின் கதையைச் சொல்கிறது spring summer fall winter and spring திரைப்படம். பல்வேறு பருவகாலநிலைகளை தலைப்பில் கொண்டிருப்பதுபோல ஒரு மனிதனின் பல்வேறு வாழ்வியல் மாற்ற நிலைகளை காட்டிச் செல்லும் இந்தப் படம் பருவநிலைகளைப்போலவே மனிதனின் வாழ்வும் பல்வேறுவகையான சுழற்சி உடையது, அவனுக்குப் பிறகு அவனைத் தொடர்ந்து வருவோரும் ஏறக்குறைய அவ்வாறான சுழற்சியோடே வாழ்வார்கள் என்பதைக் காட்டி முடிகிறது.

பூட்டியிருக்கும் வீடுகளில் நுழைந்து அங்கேயிருக்கும் பொருட்களைப் பயன்படுத்திக்கொண்டு வாழ்ந்து வரும் இளைஞன் ஒருவன்,  ஒரு வீட்டிற்குள் ஆள் இருப்பது தெரியாமல் நுழைந்துவிடுகிறான். அந்த வீட்டிலிருக்கும் கணவனால் கொடுமைப்படுத்தப்படும் இளம் மனைவிக்கும், அந்த இளைஞனுக்கும் ஏற்படும் காதலை சொல்கிறது 3- iron திரைப்படம்.

இவை இரண்டும் விருதுகள் பெற்ற படங்கள், உலக அளவில் கொண்டாடப்படும் படங்கள் என்பதை நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் உள்ளது. இரண்டு படங்களுமே நாடகத்தனத்தின் உச்சம். அதிலும் 3- Ironல் யதார்த்தத்துக்கு அருகில் கூட செல்லாத பைத்தியக்காரத்தனமான காட்சி அமைப்புகள். 3 - ironல் முக்கியக் கதாபாத்திரங்கள் இரண்டு பேரும் பேசிக்கொள்வதில்லை. பேசாமலே காதலிக்கிறார்கள். ஒரு வீட்டின் பூட்டை உடைத்து இருவரும் நுழையும்போது உள்ளே ஒரு கிழவன் செத்துக்கிடக்கிறான். அந்தக் கிழவனை எடுத்து புதைத்துவிட்டு இருவரும் அங்கேயே அன்று தங்குகிறார்கள். ஒரு பைத்தியக்காரன்கூட இப்படி செய்வானா என்று தெரியவில்லை. ஆனால் இவர்கள் செய்கிறார்கள். பிறகு கொலைக்குற்றத்துக்கு காவல்துறையால் கைதுசெய்யப்படுகிறார்கள். காவல்துறை கேள்விகளால் துளைத்தெடுக்கிறது. அப்பொழுதும் இருவரும் எதுவும் பேசுவதில்லை. ஏன் இருவரும் பேசுவதில்லை? ஒருவேளை இருவரும் ஊமையா என்று சந்தேகம் வந்துவிட்டது. ஆனால் கடைசியாக நாயகி அவள் கணவனை I love you என்று சொல்லி ஏமாற்றும்போது வாயைத் திறக்கிறாள்.அதற்கு முன் ஏன் அவள் பேசவில்லை? அதற்கு ஒரு காரணமும் இல்லை. ஏனென்றால் இப்படி எடுத்தால்தான் கலை. கதாநாயகன் ஒவ்வொருவர் பின்னாலும் அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்துகொண்டிருப்பது, பார்க்கும் இடத்திலெல்லாம் கோல்ஃப் பந்தை கட்டிவிட்டு அதை அடித்து குழந்தைபோல் விளையாடுவதையெல்லாம் பார்க்க சகிக்கவில்லை. ( உலக சினிமா ரசிகர்கள் இதற்கும் குறியீடு கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை)

spring, summer படத்தில் புத்தகுரு தன் சிஷ்யனிடம் சொல்லும் " Lust awakens the desire to possess. And that awakens the intent to murder" ,  "Sometimes we have to let go of the things we like. What you like, others will also like" போன்ற வசனங்கள் சிறப்பாக இருந்தாலும் வசனத்திற்கேற்றாற்போலவே சிஷ்யன் காமத்தில் விழுந்து , கொலைகாரனாக மாறி பிறகு மீண்டும் துறவு வாழ்க்கைக்கு திரும்புவதையெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு அறிவுரைப்புத்தகத்தைப் படித்த உணர்வுதான் ஏற்படுகிறது.

ஒரு எளிய கதையை வைத்துக்கொண்டு, வசனங்களைக் குறைத்து, நாடகத்தன்மையை அதிகரித்தால் கிம் கி டுக்கின் வணிகப்படங்கள் கலையாக மாறிவிட்டதாக தோற்றம் கொள்கின்றன. இந்தப் போலித்தனங்கள் வரவேற்பு பெறும்பொழுது யதார்த்தங்கள் புறக்கணிக்கப்பட்டு வாழ்வியல் சார்ந்த நாடகத்தனங்களை, மிகைஉணர்வுகளை கொண்டாடும் போக்கு அதிகரிக்கிறது. தன்னை முன்னிறுத்தும் பொருட்டு அல்லது தனது ரசனையை, அறிவைத் தானே மெச்சிக்கொள்ளும் பொருட்டு அவையே கலை என்றும், உலகப்படைப்பென்றும் ஒருசாராரால் முன்னெடுக்கப்படுவதற்கான ஆபத்தும் நிகழ்கிறது. கலைப்படைப்புக்கும், வெகுஜன ரசனைசார் வணிகப்படைப்புக்கும் இடையேயான இடைவெளி இதனால் குறைகிறது. இந்தப் பிரச்சாரங்கள் மூலம் கலையைத் தேடி வருபவன் அவனுக்கு தேவையானது கிடைக்காமல் தொடர்ந்து தவறாக வழி நடத்தப்படுகிறான். நல்ல கலைஞர்களின் படைப்புகள் பேசப்படாமலே போய்விடுகின்றன. கலையும், கலைஞர்களும் தோல்வியடைந்துவிடாமல் இருக்க இந்தப் போலித்தனங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.