ஜனவரி 13, 2018

அப்பாக்களின் தனிமை

நம் நாயகர்கள் வானிலிருந்து குதிப்பவர்கள். அவர்கள் சாதாரண மனிதர்களல்ல. அவர்கள் அநியாயங்களைத் தட்டிக் கேட்பவர்கள். நம்மைப் பாதுகாப்பவர்கள். தியாகங்கள் செய்பவர்கள். விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.  இதனால் இயல்பாகவே இவர்கள் புனிதத்தன்மை அடைந்தவர்கள். அந்த வகையில் பெரியாரையோ, பிரபாகரனையோ இந்தச் சூழலில் நீங்கள் விமர்சித்துவிட முடியாது. கண்மூடித்தனமாக பிம்ப ஆராதனை செய்யப்படுபவர்கள் இவர்கள். சமூக அரசியலின் பகுதிகள் இவர்கள் என்ற வகையில் இந்தத் துதிபாடலுக்கு பின்னால் பல அரசியல் விளையாட்டுகள் உள்ளன என்ற நிலையில் இவற்றைத் தவிர்த்துவிட்டு குடும்ப அரசியலைப் பற்றிச் சிந்தித்தாலும் அப்பா என்ற பிம்பம் இன்னமும் ஆராதனை செய்யப்பட்டுவரும் ஒன்றுதான்.

அரசியல் அதிகாரப் பரவலாக்கம், மாநில சுயாட்சி பற்றியெல்லாம் பேசும்போது குடும்ப அதிகாரப் பரவலாக்கம் எந்த வகையில் இருக்கிறதென சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதிகாரப் பரவலாக்கம் அற்ற குடும்பங்கள் இழந்தது என்ன என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இந்த அதிநாயக பிம்ப வழிபாட்டு அமைப்பு முறைகளில் தலைமை அமைப்புகள் எப்பொழுதும் ஆணையிடுவதன் வழியாக அமைப்புகளில் இருக்கும் பிறரைத் தாழ்வுணர்ச்சிக்கு ஆட்படுத்தி அவர்கள் ஆளுமையையே சிதைத்து அவர்களுக்குப் பின்னர் சரியான தலைமையே இல்லாமல் மாற்றிவிடுகிறது. அரசியல், குடும்ப, பணியிட அமைப்புகளில் இதைப் பொருத்திப் பார்க்கலாம். ஒட்டுமொத்த சமூகமும் ஆளுமையற்றதாக, ஆட்டு மந்தைபோல் பின்தொடர்வதாக இதன்மூலம் மாறிப்போகிறது. புதிய சிந்தனைகளை அமைப்புகளில் ஒருபொழுதும் செலுத்தாதவண்ணம் கண்மூடிப் பின்பற்றும் குழு மனப்பான்மை தடுத்துக்கொண்டே இருக்கிறது. இது அல்லது அது என்ற இருமையைத் தவிர்த்து பலவற்றின் கலவையாக எதுவொன்றையும் புரிந்துகொள்வதை இது தடுக்கிறது.

மறுபுறம் அதிநாயக பிம்பங்கள் தங்களை அந்த பிம்பத்திலேயே இருத்தி வைக்க தொடர்ச்சியாகத் தங்களைப் புனைந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இதன்மூலம் பொதுச்சமூகத்தின் அல்லது குடும்ப அமைப்பின் உச்சபட்ச இடத்தில் அமர்ந்துகொண்டு தனித்திருக்க வேண்டியிருக்கிறது. போலியான பாவனைகளை உருவாக்க வேண்டியிருக்கிறது. எவரையும் போல அதிநாயக பிம்பங்களும் சாதாரண மனிதர் என்பதைப் பிறர் உணராததன் விளைவால் வாழ்நாள் முழுக்க நடிக்க வேண்டியிருக்கிறது. யார் யாருக்காகவோ தங்களை ஒப்புக்கொடுத்து சமரசங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. மணியம்மைக்கும், பெரியாருக்கும் திருமணம் நடந்தது சரியா என்று விவாதிக்க வேண்டிய நிலைமைக்கு அது கொண்டுசெல்கிறது. ஹெலன் டெமூத்க்கும், காரல் மார்க்ஸ்க்கும் என்ன நடந்ததென்று அது பக்கம் பக்கமாய் விளக்கம் எழுத வைக்கிறது. அவரவரின் போதாமையோடு அவர்களை ஏற்றுக்கொள்ளவதை இது தடுக்கிறது. அதிநாயக பிம்பங்கள் உண்மையில் பரிதாபத்துக்குரியவர்கள். சமூகப் பொதுபுத்தியின் மந்திரக்கோலுக்கு அவர்கள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். நான்கு பேர் இருக்கும் இடத்தில் அவர்களே ஆசைப்பட்டாலும் மகிழ்ச்சியாக ஒரு குத்தாட்டம் போடக்கூட அவர்களால் முடியாது.